மனைவியை அடித்துக்கொன்று விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவர்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்று விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.;
வியாசர்பாடி,
சென்னை வியாசர்பாடி காந்திபுரம் திடீர்நகரில் வசித்து வருபவர் ஜீவா (வயது 45). பிளம்பரான இவர், 7 ஆண்டுகளுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி பகுதியைச் சேர்ந்த சரிதா (38) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
சரிதா, வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனக்கு குழந்தை இல்லாததால் சரிதா, தனது அண்ணன் குழந்தைகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
ஜீவாவுக்கு மனைவி மீது அதிக பாசம் என்றாலும், சரிதா அனைவரிடமும் சகஜமாக பேசுவதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக அவ்வப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
அடித்துக்கொலை
நேற்று முன்தினம் இரவு சரிதா, வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ஜீவா, மனைவி சரிதாவிடம் தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜீவா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரிதாவை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரிதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத ஜீவா, மனைவியின் உடலை வீட்டிலேயே பாயில் வைத்து சுற்றி குளியல் அறையில் மறைத்து வைத்துவிட்டார்.
காணவில்லை என நாடகம்
நேற்று காலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் சரிதாவின் உறவினர்களிடம் சரிதாவை காணவில்லை. எங்கு சென்றாள்? என தெரியவில்லை என அழுதுபுலம்பி நாடகமாடினார்.
இதனால் அதி்ர்ச்சி அடைந்த உறவினர்கள், பல்வேறு இடங்களில் சரிதாவை தேடினர். பின்னர் நேற்று மதியம் சரிதாவின் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டின் குளியல் அறையில் அரை நிர்வாண நிலையில் சரிதாவின் உடல் பாயில் சுருட்டி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில் ஜீவா, தலைமறைவாகிவிட்டார். இது குறித்து வியாசர்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சரிதா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாக்குமூலம்
இது குறித்து செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடுபாபு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், தலைமறைவான ஜீவாவை கைது செய்தனர். போலீசாரிடம் ஜீவா அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரிதாவிடம், ஏன் நீ நேரம் கழித்து வருகிறாய்? என கேட்டேன். இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரிதாவை தாம்பத்ய உறவுக்கு வரும்படி அழைத்தேன். இதற்காக ஆடைகளை கழட்டிவிட்டு நைட்டி போட்டுக் கொள்ளுமாறு கூறினேன். அதற்கு சரிதா மறுத்ததால், நானே அவரது ஆடைகளை கழட்டிவிட்டு அரை நிர்வாணப்படுத்தியதால் எங்களுக்குள் தகராறு முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த நான், சரிதாவை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றேன். பின்னர் அவரது உடலை பாயில் சுருட்டி, குளியல் அறையில் மறைத்து வைத்துவிட்டு அவர் மாயமானதாக நாடகம் ஆடினேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் போலீசார், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டாயே? அந்த நபர் யார்? என கேட்டதற்கு, அதை சொல்ல மறுத்துவிட்ட ஜீவா, "இறந்து போன என் மனைவி நல்லவளாகவே இருக்கட்டும்" என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.