வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
தகட்டூர் பகுதியில் மின் இறவை பாசன திட்ட வா ய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வாய்மேடு:
தகட்டூர் பகுதியில் மின் இறவை பாசன திட்ட வா ய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் இறவை பாசன திட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர், தென்னடார், வண்டுவாஞ்சேரி, வாய்மேடு, மருதூர், பஞ்சநதிக்குளம், ஆய்மூர், ஓரடியம்புலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மின் இறவை பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
1951-ம் ஆண்டு காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது தகட்டூரில் முதன் முதலில் மின் இறவை பாசன திட்டத்தின் கீழ் மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டு வாய்க்கால்களில் இருந்து வயல்களுக்கு நேரிடையாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
35 குதிரை திறன் மோட்டார்கள்
இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது எந்திரங்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டு பொருத்தப்பட்டன. ஒவ்வொரு மோட்டார் எந்திரமும் 35 குதிரை திறன் கொண்டதாக செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது இந்த எந்திரங்கள் பராமரிப்பின்றி உள்ளதால் 5 குதிரை திறன் அளவுக்கு கூட செயல்படவில்லை. ஒரே ஒரு மோட்டார் மட்டும் செயல்பட்டு வருகிறது.
வாய்க்கால் ஆக்கிரமிப்பு
இதுகுறித்து மின் இறைவை பாசன திட்ட துணைத் தலைவர் வீரப்பன் கூறுகையில், மானாவாரி பகுதிகளும், மேட்டுப்பகுதி விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் எந்த நோக்கத்துக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த திட்டம் முழுமையாக செயல்படாமல் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் சிலர் வாய்க்கால்களை ஆக்கிரமித்து வயல்களாக மாற்றி விட்டனர்.
அதிகாரிகள் வாய்க்கால்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டம் ெதாடக்கத்தில் தகட்டூர் ஊராட்சியில் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளுக்கு 14 கிளை வாய்க்கால்கள் பாசனத்திற்கு 4 மின்மோட்டார்கள் அளவுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் 75 ஏக்கர் பரப்பளவு மட்டுமே சாகுபடிக்கு பயன்பட்டு வருகிறது என்றார்.
தூர்வார வேண்டும்
அதே பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயி பூமிநாதன் கூறுகையில், தகட்டூர் மின் இறவை பாசன திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பின்றி உள்ளது. தகட்டூர் குட்டி கவுண்டர் காடு, ஆதியன்காடு, மலையங்காடு, அரிய கவுண்டர் காடு, கோவிந்தன்காடு, ராமகோவிந்தன் காடு, சுப்பிரமணியன் காடு, பண்டார தேவன்காடு வரை இந்த பாசன வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்றது.
இந்த வாய்க்கால்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு வயல்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வாய்க்கால்கள் மேடாக காட்சி தருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்கால்களின் அளவீடு செய்து தூர்வாரி பழையபடி தகட்டூர் மின் இறவை பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றார்.