வேலூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் மின்மோட்டார் மூலம் வெளியேற்றம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் வெளியேற்றினார்கள்.

Update: 2023-09-24 14:21 GMT

இடி, மின்னலுடன் பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளையில் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மாலையில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 10 மணியளவில் தொடர்ச்சியாக ½ மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோன்று காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

வேலூர் நகரில் பெய்த மழையினால் சத்துவாச்சாரி வசந்தம்நகர், சம்பத்நகர், கன்சால்பேட்டை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. அதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். வீடுகளுக்குள் மேலும் மழைநீர் புகுந்து விடுமோ என்று பலர் தூக்கமின்றி தவித்தனர்.

வெளியேற்றம்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சுகாதார அலுவலர்கள் மேற்பார்வையில் வசந்தம்நகர், சம்பத்நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் மற்றும் தெருக்களில் தேங்கி நின்ற மழைநீர், கழிவுநீரை அப்புறப்படுத்தும் வாகனம் மற்றும் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நடந்தது.

கன்சால்பேட்டையில் கால்வாய் அடைப்பு சரிசெய்யப்பட்டு குடியிருப்பு பகுதியை சூழ்ந்து நின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

79 மில்லி மீட்டர்

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒடுகத்தூரில் 79 மில்லிமீட்டர் மழை பெய்தது. மற்ற பகுதியில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

கே.வி.குப்பம் ராஜாதோப்புஅணை-64, விரிஞ்சிபுரம்-60, மேல்ஆலத்தூர்-57.60, வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம்-52.70, அம்முண்டி-33.60, காட்பாடி ரெயில்நிலைய வளாகம்-32, குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகம்-31, வேலூர் தாலுகா அலுவலக வளாகம்-27.40, பேரணாம்பட்டு-18.60, குடியாத்தம் மோர்தானா அணை-15, பொன்னை-12.80.

Tags:    

மேலும் செய்திகள்