பழனியில் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்

பழனி நகராட்சி பகுதியில் மழைக்காலத்துக்கு முன்பாக சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-09-30 17:51 GMT

நகராட்சி கூட்டம்

பழனி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கந்தசாமி, ஆணையர் கமலா, பொறியாளர் வெற்றிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொது சுகாதாரம், குடிநீர் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக வார்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தலைவர், கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-


காளீஸ்வரி (தி.மு.க.):- வார்டு பகுதிகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் சாக்கடை கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.


தலைவர்:- நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் முறையாக அகற்றப்படுகிறது. அதோடு மழைக்கால முன்எச்சரிக்கை பணிகளும் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.


ஆறுமுகம் (அ.தி.மு.க.):- எங்கள் வார்டு பகுதியில் மழை பெய்தால் சாக்கடை கழிவுநீர் வெளியேறி மழைநீருடன் கலக்கிறது. எனவே துப்புரவு பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.


தலைவர்:- துப்புரவு பணியாளர்கள் நியமனம் நகராட்சி செய்ய முடியாது. மேலும் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப போதிய துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். பணிகளை மேற்கொள்ள போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.


வரி பாக்கி


மகேஸ்வரி (தி.மு.க.):- ஜிகா திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் எப்போது தொடங்கும்?. எங்கள் வார்டில் சில பகுதிகளில் பணிகள் நடைபெறவில்லை. மார்க்கெட் பகுதியில் காலை, மாலையில் லாரிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


தலைவர்:- ஜிகா திட்ட பணிகள் முடிந்ததும், அனைத்து பகுதிகளுக்கும் அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். மார்க்கெட் பகுதியில் லாரிகள் வரும் நேரத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


விமலபாண்டியன் (தி.மு.க.):- நகராட்சிக்கு நிதிபற்றாக்குறை உள்ள நிலையில் பழனி முருகன் கோவில் சார்பில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியை வசூலிக்க துறை அமைச்சரிடம் முறையிட வேண்டும்.


தலைவர்:- இது பற்றி பல முறை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி உள்ளோம். மேலும் இரு துறை சார்ந்த பிரச்சினை என்பதால் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.


சாகுல்அமீது (தி.மு.க.):- நகராட்சியின் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. அதேபோல் குப்பைகளை சேகரிக்க பயன்படும் பேட்டரி வண்டிகள் பழுதாகி உள்ளது. இதனால் அது பயன்பாடு இன்றி உள்ளது.


தலைவர்:- நகரில் தெரு விளக்குகளை சரி செய்யவும், கூடுதலான தெருவிளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேட்டரி வண்டிகள் பழுது நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்