கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-05-15 08:57 GMT

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக உயர்ந்துள்ளது. இரு நிகழ்வுகளிலும் ஒரே வகையான கள்ளச்சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 6 ஆக இருந்தது. இன்று காலை மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சித்தாமூரில் ஏற்கனவே மூவர் இறந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எக்கியார்குப்பம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், முழுக்க முழுக்க தொழிற்சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்படும் எரிசாராயத்தில் தண்ணீர் கலந்து தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

சித்தாமூரில் உயிரிழந்தவர்கள் குடித்ததும் அதே வகையான கள்ளச்சாராயம் தான் என்றும், இரு இடங்களிலும் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் ஒரே இடத்திலிருந்து வாங்கி வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையானால் அது மிகவும் கவலையளிக்கும் செய்தி ஆகும். எக்கியார் குப்பமும், சித்தாமூரும் வேறு வேறு மாவட்டங்கள். இரு இடங்களுக்கும் இடையிலான தொலைவு ஏறக்குறைய 60 கி.மீ ஆகும். இரு இடங்களுக்கும் ஒரே தரப்பிடமிருந்து மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் கள்ளச்சாராயக் கட்டமைப்பு மாவட்டங்களைக் கடந்து ஆலமரமாக வேரும், விழுதும் ஊன்றி நிற்பதாகத் தான் பொருள் ஆகும். இத்தகைய கட்டமைப்பு ஓரிரு நாட்களிலோ, மாதங்களிலோ உருவாகி இருக்க வாய்ப்பில்லை. பல ஆண்டுகளாக காவல்துறையினரின் துணையுடன் தான் உருவாகியிருக்க வேண்டும்.

மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்த கட்டமைப்பு தகர்த்தெறியப்பட வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி வரும் ஆய்வுகளில் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்பு நிகழ்ந்த விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது; அதை காவல் துறை கண்டுகொள்ளவில்லை என்பதைத் தான் இந்தச் செய்தி உணர்த்துகிறது.

தமிழக அரசால் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவாக இருந்தாலும், கள்ளச் சாராயமாக இருந்தாலும் அவற்றைக் குடிப்பவர்களின் உயிரைப் பறிப்பது உறுதி. தமிழகத்தில் மது அருந்துவதால் ஆண்டுக்கு ஏறக்குறைய 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது தமிழக அரசால் தெரிவிக்கப்படும் மது விற்பனை குறித்த அதிகாரப்படியான புள்ளி விவரங்களின் அடிப்படையிலானது தான்.

குடிப்பகங்களில் கணக்கில் காட்டாமல் விற்பனை செய்யப்படும் மது, சட்டத்திற்கு எதிராக விற்கப்படும் கள்ளச்சாராயம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால், மதுவால் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடும். இதற்கு காரணமான அனைத்து வகை மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு நடைமுறைப் பிரிவு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படும் வரையிலும், அப்பிரிவில் இடமாற்றம் பெறுவதற்காக லட்சக் கணக்கில் கையூட்டு தரும் நடைமுறை தொடரும் வரையிலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அக்கறை இருந்தால், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

> கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண்ணை அரசு அறிவிக்க வேண்டும்; அதன்வழியாக தகவல் தெரிவிப்போரின் அடையாளங்களை கமுக்கமாக வைத்திருப்பதுடன், அவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.

> கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

> மதுவிலக்கு நடைமுறைப்பிரிவில் உள்ள காவலர் முதல் கண்காணிப்பாளர் நிலை வரை உள்ள அனைவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட வேண்டும்; மதுவிலக்கு நடைமுறைப்பிரிவுக்கு கடமை உணர்வும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் உண்மையான அக்கறையும் கொண்ட இளம் அதிகாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும்.

> கள்ளச்சாராய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். 6 மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணையில் வெளிவரமுடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

> கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதுடன், அரசு மதுக்கடைகளையும் மூடுவதன் மூலம் தமிழகத்தை மதுவில்லா மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்