சேலம் மாநகர குடிநீருக்காக பனமரத்துப்பட்டி ஏரியில் ஆய்வு: விவசாய நிலங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வரக்கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி

சேலம் மாநகர குடிநீருக்காக பனமரத்துப்பட்டி ஏரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில் விவசாய நிலங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்றார்.;

Update:2022-09-02 02:15 IST

பனமரத்துப்பட்டி,

அன்புமணி ராமதாஸ் எம்.பி.

மேட்டூர் அணையில் இருந்து வீணாக கடலில் கலக்கும் காவிரி உபரிநீரை பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்பி சேலம் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று பனமரத்துப்பட்டி ஏரிக்கு வந்தார். அப்போது அவர், கொட்டும் மழையில் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்திலேயே பனமரத்துப்பட்டி ஏரிதான் பெரிய ஏரி. இந்த ஏரியில் இருந்து சேலம் மாநகருக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. காவிரி உபரி நீர் திட்டத்தில் பனமரத்துப்பட்டி ஏரியை சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நான் வலியுறுத்தி வருகிறேன்.

தடுப்பணைகள்

அ.தி.மு.க.- தி.மு.க. 2 கட்சிகளும் மழைநீரை சேகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை. காவிரியில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ஒரு தடுப்பணை கட்டினால், காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீர் வீணாகாதவாறு பாதுகாக்க முடியும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுகிறார்கள். இப்போது ஒன்று பேசுகிறார்கள்.

பாதிக்க கூடாது

எங்களை பொறுத்தவரையில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் கட்டுமானங்கள் தேவைதான். சேலம்- சென்னை இடையே ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. தற்போது 4-வது ஒரு சாலை தேவையில்லை என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருவதை நாங்கள் எதிர்ப்போம். சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் எதிராக இந்த திட்டம் உள்ளது. நான்தான், இந்த திட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எதிர்ப்போம்

விவசாயத்தை பாதிக்காமல், விவசாய நிலங்களை அழிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வாருங்கள். அதை விட்டு விட்டு விவசாய நிலங்களை அழித்துதான் 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவோம் என்றால், அந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது. நிச்சயம் நாங்கள் அதை எதிர்ப்போம்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

ஆய்வின் போது அருள் எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் விஜயராசா, மாவட்ட தலைவர் முருகேசன், மாநகர் மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்