'இந்தியாவை ஒற்றைத் தன்மை நாடாக மாற்றி விடாதீர்கள்' என்று முழங்கியவர் ஆசைத்தம்பி: முதல்-அமைச்சர் பேச்சு

நாடாளுமன்றத்தில் 1977-ம் ஆண்டிலேயே இந்தியாவை ஒற்றைத் தன்மை நாடாக மாற்றி விடாதீர்கள் என்று முழங்கியவர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-10-14 00:21 GMT

சென்னை,

தி.மு.க. முன்னோடி ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழா தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசைத் தம்பியின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, ஆசைத்தம்பியின் புகைப்பட கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார். விழாவில், ஆசைத்தம்பியின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

திராவிட இயக்கத் தூண்

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

'வாலிபப் பெரியார்' என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழாவை ஏன் நடத்துகிறோம்? என்றால், வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாவதற்காகத் தான். 'சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்' என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் ஆசைத்தம்பி.

1949-ஆம் ஆண்டு தி.மு.க.வை உருவாக்கியபோது, தலைவர் கருணாநிதி பொறுப்பு வகித்த கழகப் பிரசாரக் குழுவில் இடம்பெற்றவர். விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் முதன் முதலாக சந்தித்த 1957-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரில் ஒருவர் ஆசைத்தம்பி. 1967-ல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். ஆயிரம் விளக்கு தொகுதியில் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமியையும், எழும்பூர் தொகுதியில், அப்போதைய அமைச்சரான ஜோதி வெங்கடாசலத்தையும் தோற்கடித்தவர் ஆசைத்தம்பி.

ஒற்றைத் தன்மை நாடாக...

அதற்கு பிறகு 1977-ல் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு என ஆசைத்தம்பி வடசென்னையில் இருந்து வெற்றி பெற்றார். கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பி.க்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார். நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றும்போது, ''இந்தியாவை ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்றி விடாதீர்கள்'' என்று அப்போதே முழங்கியவர் ஆசைத்தம்பி.

''ஒற்றை மொழி ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். ''தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!'' என்றும் ஆசைத்தம்பி நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார்.

அனாதைகளாக ஆகியிருப்போம்

தி.மு.க.வில் இருந்தாலும் திராவிடர் கழகத்தின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி. எனவே தான், அவர் 'வாலிப பெரியார்' என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்த ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். தனது இறுதி உரையில், 'திராவிட இயக்கம் தொடங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்' என்று சொன்னவர். இதுதான் அவரது மரண சாசனம்!

ஆசைத்தம்பி மறைந்தபோது தலைவர் கருணாநிதி, ''என் அன்பே! ஆசைத்தம்பி! நீ மறையவில்லை. மறைய மாட்டாய். உன்னையும் உன் உறுதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்'' என்று சொன்னார். ஆசைத்தம்பியை நாம் மறக்கவில்லை; அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 'வாலிபப் பெரியார்' ஆசைத்தம்பியின் புகழ் வாழ்க.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் விழாவில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர்கள் சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆசைத்தம்பியின் மகன் சவுந்தர பாண்டியன், மருமகள் விஜயா சவுந்தர பாண்டியன், பேரன் அருண் உள்ளிட்ட ஆசைத்தம்பியின் குடும்பத்தார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்