விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

முதுமலையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், விநாயகரை வளர்ப்பு யானைகள் வலம் வந்து தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கியது.;

Update: 2022-08-31 15:12 GMT

கூடலூர், 

முதுமலையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், விநாயகரை வளர்ப்பு யானைகள் வலம் வந்து தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கியது.

சதுர்த்தி விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை, மாலை நேரங்களில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பின்னர் வனப்பகுதியை ரோந்து சென்று கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்படுகிறது.

மேலும் சுதந்திர மற்றும் குடியரசு தினங்கள், யானைகள் தினம், விநாயகர் சதூர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் விழா கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் சதுர்த்தி விழாவை வனத்துறையினர் கொண்டாடினர். இதற்காக வளர்ப்பு யானைகள் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டது.

விநாயகரை வணங்கிய யானைகள்

பின்னர் சந்தனம் மூலம் வளர்ப்பு யானைகளை பாகன்கள் அலங்கரித்தனர். ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடினர். பின்னர் புலிகள் காப்பக துணை இயக்குனர் திவ்யா முன்னிலையில் முகாம் வளாகத்தில் உள்ள கோவிலில் விநாயகருக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கையில் வைத்திருந்த மணியை அடித்தபடி கோவிலை வலம் வந்தது. பின்னர் விநாயகருக்கு மரியாதை செய்யும் வகையில் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்ட படி வணங்கியது.

இதைத்தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கரும்பு, தேங்காய், வெல்லம், ஆப்பிள், மாதுளை, அன்னாசி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பழங்களை வனத்துறையினர் வழங்கினர். இதேபோல் ராகி, கேழ்வரகு உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ், பவித்ரா, வனவர் சந்தனராஜ் மற்றும் சுற்றுலா பயணிகள், வனத்துறையினரின் குடும்பத்தினர் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்