கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நடந்த நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

Update: 2022-05-30 15:00 GMT

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நடந்த நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

கோடை விழா

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் மலர் கண்காட்சி 29-ந்தேதி முடிவடைந்தது. சுமார் 57 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

மேலும் கோடை விழா வருகிற 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கைப்பந்து, கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

நாய்கள் கண்காட்சி

இந்தநிலையில் கோடை விழாவின் 7-ம் நாளான இன்று கால்நடை துறையின் சார்பில் நாய்கள் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. இதில் ஜெர்மன் ஷெப்பர்டு, ஜெயின் பெர்னாட், கோல்டன் ரெட்ரீவர், லேப்பரடார், பிக்புல், டாபர்மேன், சிஜ்சு, பக், டெரியர், பொமரேனியன் உள்ளிட்ட ரக நாய்கள் உள்பட மொத்தம் 54 நாய்கள் கண்காட்சியில் கலந்துகொண்டன. அப்போது நாய்கள் அன்னநடை போட்டும், பாய்ந்து ஓடியும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

பின்னர் கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானலை சேர்ந்த ஹரிஷ் என்பவரது ஜெயின்பெர்னாட் ரக நாய் தட்டிச்சென்றது. இதேபோல் பல்வேறு பிரிவுகளின்கீழ் நடைபெற்ற போட்டிகளிலும் நாய்கள் பங்கேற்று வெற்றிபெற்றன.

சாரல் மழை

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கால்நடை துறை உதவி இயக்குனர் பிரபு தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர் சங்கரவிநாயகம் வரவேற்றார். முன்னாள் கால்நடைத்துறை உதவி இயக்குனர் அப்துல் ஹக்கீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். இதில் கால்நடை துறை உதவி இயக்குனர் சுரேஷ், கால்நடை டாக்டர்கள் அருண், தினேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொடைக்கானலில் நேற்று காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாய்கள் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்