வீட்டுக்குள் புகுந்த பாம்புடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்த நாய்

மன்னார்குடியில் வீட்டுக்குள் புகுந்த பாம்புடன் சண்டையிட்டு நாய் ஒன்று உயிர் தியாகம் செய்துள்ளது. அந்த வாயில்லா ஜீவனின் துணிச்சல் மிகுந்த போராட்டம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-15 16:33 GMT

மன்னார்குடி:-

மன்னார்குடியில் வீட்டுக்குள் புகுந்த பாம்புடன் சண்டையிட்டு நாய் ஒன்று உயிர் தியாகம் செய்துள்ளது. அந்த வாயில்லா ஜீவனின் துணிச்சல் மிகுந்த போராட்டம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரை சேர்ந்தவர் தேவதாஸ். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாயுடன், தேவதாஸ் அன்புடன் பழகி வந்தார்.

இதனால் அந்த நாய் அடிக்கடி அவருடைய வீட்டுக்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தேவதாசின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நாய் திடீரென குரைத்தது.

வீட்டுக்குள் நுழைந்த பாம்பு

சத்தம் கேட்டு தேவதாஸ் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது நாகப்பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அந்த பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாதபடி நாய், பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டை போட்டது.

இந்த சண்டையில் பாம்பு, நாயை தீண்டி விட்டது. ஆனாலும் நாய், பாம்பை உள்ளே விடாமல் துரத்துவதில் குறியாக இருந்தது. இதனிடையே பாம்பு வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி இருந்த காருக்குள் புகுந்தது.

நாய் பரிதாப சாவு

இதுகுறித்து தேவதாஸ் மன்னார்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன், தீயணைப்பு வீரர் பரமசிவம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று காருக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

இதனிடையே நாகப்பாம்பு தீண்டியதில் விஷம் தாக்கிய நாய் சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. பாம்புடன் துணிச்சலுடன் போராடி உயிர் தியாகம் செய்த அந்த வாயில்லா ஜீவனின் (நாய்) செயல் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்