மக்களை பற்றி கவலைப்படுவதில்லை: மு.க.ஸ்டாலினின் ஒரே எண்ணம் உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்குவது தான் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
தமிழக மக்களை பற்றி மு.க.ஸ்டாலின் கவலைப்படுவதில்லை. அவருடைய ஒரே எண்ணம், உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்குவது தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
தமிழக மக்களை பற்றி மு.க.ஸ்டாலின் கவலைப்படுவதில்லை. அவருடைய ஒரே எண்ணம், உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்குவது தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டினார்.
பொதுக்கூட்டம்
அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட சார்பில் டி.எம்.கோர்ட்டு அருகே பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பேச்சாளர்கள் ஆவடி குமார், தஞ்சை மோகன் சவுண்ட் சரவணன் ஆகியோர் பேசினர். மாநில அமைப்பு செயலாளரும், மாநகர் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. என்ற இந்த இயக்கம், மக்களால் மக்களுக்காக தொடங்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர். தலைமை பொறுப்பை ஏற்றார். தனது வாழ் நாள் முழுவதும் அவர் மக்களுக்காகவே வாழ்ந்தார். அவரது வழியிலேயே ஜெயலலிதாவும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார். அவர் மாணவர்களுக்கு மடிக்கணினி, அம்மா உணவகம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டு வந்தார்.
நலத்திட்டங்களை முடக்கி விட்டார்கள்
ஆனால் இன்றைய தி.மு.க. அரசு, மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் முடக்கி விட்டார்கள். தி.மு.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் தமிழக மக்களை மிக கேவலமாக பேசி கொண்டு இருக்கிறார்கள். இதனை தட்டி கேட்க வேண்டிய முதல்-அமைச்சர் மவுனமாக இருக்கிறார். அவருக்கே அமைச்சர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல், பொது வெளியில் புலம்புகிறார். சொந்த கட்சியினரை கூட கட்டுப்படுத்த முடியாத ஒரே தலைவர் ஸ்டாலின் தான். அப்படிப்பட்ட ஸ்டாலினை நமது நிதி அமைச்சர் புரட்சி தலைவர் கூறுகிறார். அவருக்கு புரட்சி தலைவர் என்றால் என்ன அர்த்தம் தெரியாமல் உள்ளது.
நிர்வாக லட்சணம்
தமிழக நிதி அமைச்சர், தன்னை ஒரு டான் போல நினைத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார். நாங்கள் எல்லாம் டானுக்கு, டான் என்பதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சியை விட்டு போவதற்கு முக்கிய காரணமாக இருக்க போகிறவர் நமது நிதி அமைச்சர் தான். அவர் மக்களுக்கான தேவைகளை பற்றி கவலைப்படுவதில்லை. அரசை, கம்பெனி போல் நினைத்து செயல்படுகிறார். கம்பெனி கணக்குகளை கையாள்வது போல இந்த் அரசாங்கத்தை நடத்தி கொண்டு இருக்கிறார். அண்ணா தொடங்கிய தி.மு.க. என்ற இயக்கம் தற்போது வாரிசு கட்சியாக மாறி விட்டது. அண்ணாவின் கொள்கைகளை கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் குழி தோண்டி புதைத்து விட்டனர். தம்பி நடிகர் விஜய் வாரிசு என்ற பெயரில் ஒரு படம் நடித்து கொண்டு இருக்கிறார். உண்மையில் அந்த படத்தில் நடிக்க வேண்டியது வாரிசு நாயகன் உதயநிதி ஸ்டாலின் தான்.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் முடங்கி போய் விட்டது. அமைச்சர் மூர்த்தியே, மேயரை கண்டித்து உண்ணாவிரதம் நடத்துவேன் என்று கூறுகிறார். இது தான் தி.மு.க.வின் நிர்வாக லட்சணம். சமூக நலத்திட்டங்கள் முடக்கம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கெடு, அமைச்சர்களின் கீழ்தரமான பேச்சு என தமிழக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அதனை பற்றி எல்லாம் முதல்-அமைச்சருக்கு கவலையில்லை. அவருடைய ஒரே எண்ணம், உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்குவதில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.