கொல்லம் ெரயில் சிவகாசியில் நிற்குமா?
கொல்லம் ரெயில் சிவகாசியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.;
சிவகாசி,
கொல்லம் ரெயில் சிவகாசியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
போதிய பயணிகள்
சென்னையில் இருந்து சிவகாசி வழியாக செங்கோட்டைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. போதிய பயணிகள் இந்த ரெயில்களை பயன்படுத்த தயாராக உள்ளனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் சென்னையில் இருந்து சிவகாசி வழியாக செங்கோட்டைக்கும், அடுத்துள்ள கேரளா பகுதிக்கும் ரெயில்களை இயக்க மறுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு சிவகாசியை கடந்து செல்கிறது. ஆனால் சிவகாசி ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது.
இதனால் சிவகாசி ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் அதற்கு முன்னதாகவே விருதுநகர் ரெயில் நிலையத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்திலும் இறங்கி பின்னர் அங்கிருந்து வேறு வாகனங்களில் சிவகாசி வர வேண்டிய நிலை உள்ளது.
வரவேற்பு
சிவகாசியில் உள்ள தொழில்கள் மூலம் ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் வரி மத்திய அரசுக்கு கிடைத்து வரும் நிலையில் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் கொல்லம் ரெயில் சிவகாசியில் நின்று செல்லாத நிலை உள்ளது.
இந்த ரெயிலை சிவகாசியில் நிறுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கடந்த 2019 மார்ச் 1-ந்தேதி முதல் 2020 மார்ச் 1-ந்தேதி வரை சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை சிவகாசியை சேர்ந்த 9,300 பேர் பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. சிவகாசி மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இந்த ரெயிலை தொடர்ந்து சிவகாசியில் நிறுத்த தேவையான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று சிவகாசி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.