வங்கி கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கி கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 404 பேர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடந்தது.
வேலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் பிரேமா தலைமையில் குழு உறுப்பினர்கள் 13 பேர் விண்ணப்பித்தவர்களின் சாதி சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழில் தொடங்குவதற்கான திட்டம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட நபர்களுக்கு தேசிய வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். வங்கிகள் மூலம் அதிகபட்சமாக ரூ.7½ லட்சம் கடனுதவி வழங்கப்படும். அதில் ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதமும், பழங்குடியினருக்கு 50 சதவீதமும் தாட்கோ மூலம் மானியம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயிதே மில்லத் அரங்கில் ஒரேநேரத்தில் 350-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் குவிந்ததால் சிறிதுநேரம் கூட்டநெரிசல் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.