அரிய வகை ரத்தம் கொண்ட சிறுமியை ரத்த சோகையிலிருந்து காப்பாற்றிய டாக்டர்கள்

அரியவகை ரத்தப்பிரிவு கொண்ட சிறுமி ரத்த சோகை நோயால் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டாள். அந்த சிறுமிக்கு பெங்களூருவிலிருந்து ரெயில் மூலம் ரத்தம் வரவழைத்து ஏற்றி டாக்டர்கள் உயிர் பிழைக்க வைத்தனர்.;

Update: 2023-06-28 17:12 GMT

ரத்த சோகை நோய்

திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். சிறுமியை கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அந்த சிறுமியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையை தொடங்கினர்.

உடலில் ரத்தம் குறைவாக இருந்ததால் உடல் நலம் குன்றி மிகவும் ஆபத்தான நிலையில் சிறுமியின் காணப்பட்டாள். டாக்டர்களின் பரிேசாதனையில் சிறுமியின் ரத்தம் அரியவகை ரத்தப்பிரிவான பாம்பே வகை ரத்தம் என தெரியவந்தது.

சிறுமியின் உடலில் ரத்தம் ஏற்றப்படவில்லை என்றால் உயிரிழக்கும் நிலை உருவானது. ஆனால் சிறுமியின் ரத்த வகை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களிலும் உள்ள ரத்த வங்கிகளில் இந்த வகை ரத்தப் பிரிவு இருப்பு குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது.

ரெயில் மூலம்...

அப்போது அரியவகையான பாம்பே வகை ரத்தம் பெங்களூருவில் இருப்பதை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் அறிந்தனர். இதனையடுத்து உடனடியாக பெங்களூருவில் உள்ள ரத்த வங்கியை தொடர்பு கொண்டு அங்கிருந்து திருவண்ணாமலைக்கு ரத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் இருந்து ரெயில் மூலம் பாம்பே வகை ரத்தம் திருவண்ணாமலைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த ரத்தம் நேற்று முன்தினம் சிறுமியின் உடலில் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் குழந்தை உடல்நிலை சீரானது. தொடர்ந்து ரத்த சோகைக்கான சிகிச்சைகள் மருத்துவமனையில் அச்சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாராட்டு

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரிய வகை ரத்தப் பிரிவு இருப்பது கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, ரத்த வங்கி தலைவர் டாக்டர் ஜெயலட்சுமி மற்றும் மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி டீன் அரவிந்தன் மற்றும் டாக்டர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்