மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி அளிக்க கூடாது
உள்ளாட்சி நிர்வாகத்தை அரசியலாக்கி மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி அளிக்க கூடாது என்று மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.;
உள்ளாட்சி நிர்வாகத்தை அரசியலாக்கி மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி அளிக்க கூடாது என்று மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவி காமாட்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலர் செல்வம் தீர்மானங்களை படித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-வடவீரபாண்டியன் (காங்.): பட்டவர்த்தி அண்ணா காலனி பகுதியில் சாலை அமைக்க இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும். இளந்தோப்பு பகுதியில் பழவாற்றில் படித்துறை கட்டித்தர வேண்டும்.
சாலை சேதம்
மோகன் (தி.மு.க.) : புதிதாக போடப்பட்ட சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் அமைக்க வாய்ப்பு உள்ளது. புதிய சாலையின் மீது வயலில் உழவு மேற்கொள்ள பயன்படுத்தப்படும் கே.ஜி. வீல் எனப்படும் இரும்பு சக்கரங்களை ஓட்டி சாலையை சேதப்படுத்தி வருகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன நாகங்குடி பகுதியில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்.
நெருக்கடி
காந்தி(தி.மு.க.): ஊராட்சி ஒன்றியம் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மூலமே செயல்படுத்த வேண்டும். இதில் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளரோ, ஒன்றிய செயலாளர்களோ தலையிடக்கூடாது. உள்ளாட்சி நிர்வாகம் வேறு, அரசியல் வேறு. உள்ளாட்சி நிர்வாகத்தை அரசியலாக்கி மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி அளிக்க கூடாது. மக்களிடம் வாக்குகளை பெற்று பணியாற்றிவரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையிலேயே நிதி வருகிறது. அப்படி இருக்கும்போது 1500 வாக்குகள் கொண்ட ஊராட்சியையும், 5000 வாக்குகள் கொண்ட ஊராட்சியையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல் பெரிய ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பகுதி நேர அங்காடி
சிவகுமார் (தி.மு.க) : மேல மாப்படுகை பகுதியில் பகுதி நேர அங்காடி அமைத்து தரவேண்டும் இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் நன்றி கூறினார்.