பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா?
பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா? இதுபோன்ற சந்தேகங்களுக்கு பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-;
கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்பச் செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதைப் பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றிக் கேட்டால், அந்தப் பெட்ரோல் பங்கில்தான் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா?
பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?
இதுபோன்ற சந்தேகங்களுக்கு பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரி, வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-
அளவு குறைவாக இருக்கும்
சித்ரா (குடும்ப தலைவி, பாலமரத்துப்பட்டி) :- கடைகள், மார்க்கெட்டுக்கு செல்வதற்காகவும், குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதற்காகவும் தான் மொபட்டை வெளியில் எடுத்துச்செல்வோம். அதனால் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் மொபட்டில் பெட்ரோல் நிரப்புவோம். அதுவும் குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்குகளில் மட்டும் தான் நிரப்புவோம்.
ஏனென்றால் சில பங்குகளில் பெட்ரோலின் அளவு குறைவாகவும், தரம் குறைந்ததாகவும் இருக்கும் என்று அடிக்கடி பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புபவர்கள் கூறுவார்கள். அதனால் எந்த பங்குகளில் தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல் தருகிறார்களோ அங்கு தான் பெட்ரோல் நிரப்புவோம்.
ராமச்சந்திரன் (பேக்கரி கடை உரிமையாளர், குள்ளனம்பட்டி) :- பெட்ரோலில் கலப்படம், அளவு குறைவது போன்ற புகார்கள் இருக்க தான் செய்கிறது. ஆனாலும் தினமும் நாம் வாகனங்களில் வெளியில் செல்ல வேண்டும் என்றால் பெட்ரோல் நிரப்பி தான் ஆக வேண்டும். தினமும் பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் போடுவதால் எந்த பங்குகளில் கலப்படம் இல்லாமலும், அளவு குறையாமலும் பெட்ரோல் நிரப்பப்படுகிறது என்பதை ஓரளவு நாம் கணித்துவிட முடியும். எனவே அந்த பங்குகளில் மட்டும் பெட்ரோல் நிரப்பினால் வாகனங்களும் பழுதடையாது. நாம் கொடுக்கும் பணத்துக்கு சரியான அளவில் பெட்ரோலும் கிடைத்துவிடும்.
செயல்முறை விளக்கம்
காமராஜ் (பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர், திண்டுக்கல்) :- எங்கள் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களை முதலில் பெட்ரோல் மீட்டரையும், அதற்கான விலையையும் சரிபார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவோம். அதன் பின்னரே அவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவோம். ஒருவேளை அவர்களுக்கு பெட்ரோலின் அளவு குறைவாக இருப்பது போன்று சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 2 லிட்டர் அல்லது 5 லிட்டர் கேனில் அவர்களின் கண் முன்பே பெட்ரோலை நிரப்பி காண்பித்து சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
அதோடு பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலும் அதற்கும் முறையாக விளக்கம் அளிப்போம். அதாவது பெட்ரோல் தர பரிசோதனை பேப்பர் மூலம் பெட்ரோல் தரமானதாக இருக்கிறது என்பதை வாடிக்கையாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிப்போம். பெட்ரோல் தர பரிசோதனை பேப்பரில் பெட்ரோலை ஊற்றுவோம். அது நனையாமல் இருந்தால் அது தரமான பெட்ரோல் ஆகும். அதுவே கலப்பட பெட்ரோல் என்றால் அந்த தர பரிசோதனை பேப்பரில் ஈரப்பதம் ஏற்பட்டுவிடும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் சந்தேகத்துக்கு தீர்வு அளிப்போம். மேலும் பெட்ரோல் தரம், அளவு பிரச்சினை உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க பெட்ரோல் விற்பனை அதிகாரியின் செல்போன் எண்ணையும் எங்கள் பங்கில் உள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ளோம்.
லிட்டர் கணக்கில் வாங்க வேண்டும்
அரவிந்த் (மெக்கானிக், லிங்கவாடி) :- வழக்கமாக மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1000 என்ற அடிப்படையில் தான் பெட்ரோல் நிரப்புகின்றனர். யாரும் லிட்டர் கணக்கில் நிரப்புவதில்லை. ஒரு லிட்டர், 2 லிட்டர் என நிரப்பும் போது அதன் அளவு குறைய வாய்ப்பில்லை. ஆனால் ரூ.200, ரூ.500 என்ற அடிப்படையில் நிரப்பும் போது லிட்டர் கணக்கு மாறுபடும். எனவே பெட்ரோலின் அளவு குறைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழும். இதனை தவிர்க்க லிட்டர் கணக்கில் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பலாம்.
விஜயலட்சுமி (பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர், வத்திப்பட்டி) :- எங்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது மீட்டரை கவனிக்கும்படி கூறுகிறோம். அவர்கள் கூறும் தொகைக்கு பெட்ரோல் நிரப்பியதும் அதனையும் சரிபார்த்துக்கொள்ளும்படி தெரிவிக்கிறோம். எனவே இதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. மேலும் தினமும் பெட்ரோல் விற்பனையை தொடங்குவதற்கு முன்பு ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் நிரப்பி அளவு சரியாக உள்ளதா? என சோதனை செய்வோம். அளவு சரியாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு நிரப்புவோம். அதோடு பெட்ரோல் நிரப்ப பயன்படுத்தப்படும் எந்திரமும் நாம் செலுத்தும் தொகைக்கு ஏற்ப சரியான அளவில் தான் பெட்ரோலை வழங்கும். அதில் தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எந்திரம் தவறு செய்யாது
தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறும்போது, 'அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவுப்படி 'ஆட்டோ மெஷின்' என்று அழைக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் செயல்படும் தானியங்கி எந்திரம் கொண்ட பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 800 பங்குகளில் 80 முதல் 90 சதவீதம் பங்குகளில் இதுபோன்ற தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எந்திரம் தவறு செய்யாது. சரியான அளவில் பெட்ரோல் போடவில்லை என்று உணரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கு மேலாளரிடம் சென்று தொழிலாளர் துறை பரிசோதித்து வழங்கி உள்ள 5 லிட்டர் கேனில் எரிபொருள் நிரப்பி அளவை உறுதி செய்து காண்பிக்கச் சொல்லலாம்.
அதேபோல் கொடுக்கிற பணத்திற்கு சரியான அளவில் எரிபொருள் போடப்படுகிறதா? என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதேபோல் நாசில் வழியாக எரிபொருள் போடும் போது தவறு நடக்க வாய்ப்பு இல்லை. பெட்ரோல் போட்டுவிட்டு கூகுள்பே மூலம் பணம் செலுத்தும் போது, செலுத்தப்பட்ட நேரத்தை துல்லியமாக கூறினால் அதனை தானியங்கி எந்திரம் மூலம் சரியான அளவில் பெட்ரோல் போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க முடியும். அதேபோல் தானியங்கி எந்திரத்தில் ரூ.200-க்கு பெட்ரோல் போடுவதாக டைப் செய்துவிட்டு, வாகனத்தில் ரூ.100-க்கு மட்டும் எரிபொருள் வழங்கிவிட்டு, இணைப்பை துண்டித்தால் தானியங்கி எந்திரம் பழுதாகிவிடும். அதற்கு பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் பழுதைத் சரிசெய்ய முடியும். வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்கு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி எந்திரத்தில் கேமரா மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவறை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
புகார் தெரிவிக்கலாம்
இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு, அவை அனைத்தும் இந்திய எண்ணெய் நிறுவன அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட தொகையை பதிவு செய்துவிட்டு அதைவிட குறைவான அளவு எரிபொருள் வழங்கினால் எந்திரம் இணைப்பு துண்டிப்பாகி, அடுத்த வாடிக்கையாளருக்கு எரிபொருள் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் துண்டிக்கப்பட்ட இணைப்பைச் சரி செய்ய முடியும் என்பதால் தவறுக்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் பெட்ரோல் போடுவதற்கு முன்பு மீட்டரில் சைபர் என்று இருப்பதை பார்த்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்திய எண்ணெய் நிறுவன முகநூல் பக்கம், டுவிட்டர், 'MoPNG E Seva' என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.