செந்தில் பாலாஜி கைதுக்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தும்கூட, விசாரணை முடிந்து, எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அவரைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதை தி.மு.க. அரசு முறியடிக்கும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தி.மு.க. மீது சேற்றை வாரி இறைத்தாலும் அவற்றை சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர்கொள்ளும் துணிவும், வலிமையும் அதற்கு உண்டு. பல நெருக்கடிகள், அவதூறுகள், வழக்குகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற வரலாறும் அதற்கு உண்டு. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மிகவும் சீர்கேடாகும் அளவுக்கு இப்படி நடப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, மனித உரிமை பறிப்பும்கூட. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுத்துள்ளதோடு, அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இத்தகைய அச்சுறுத்தும் அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம். மிரட்டல்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான குரல்களை முடக்கநினைப்பது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. மேலும், தமிழ்நாடு மக்களும் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்பது தெளிவு. மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்.
முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவோடு அமைத்துள்ள தி.மு.க. அரசை மிரட்டும் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான அதிகார அத்துமீறலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்:- செந்தில் பாலாஜியை கைது செய்தது அதிகார அத்துமீறல். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையின் மூலம் தமிழ்நாடு அரசை பா.ஜ.க. அரசு மிரட்டி பார்க்க நினைக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்று சொல்லப்பட்டாலும் அது திட்டமிட்ட அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையே ஆகும். பா.ஜ.க. அரசு தம்மை பகைத்துக் கொள்ளும் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காக கையாளும் ஒரு அரசியல் உத்தியே ஆகும். இப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பது உண்மையில் முதல்-அமைச்சருக்கு வைக்கப்பட்ட செக்மேட் ஆகும்' என்று கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.