கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய தி.மு.க. நிர்வாகி நீக்கம் -துரைமுருகன் நடவடிக்கை

கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த வாலிபரை மிரட்டிய தி.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-30 22:36 GMT

சென்னை,

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்று இருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பட்டியலின இளைஞரை பிடித்து வெளியே தள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த இளைஞரின் சாதியை குறிப்பிட்டு, அவரின் தந்தையையும் மிக மோசமாக வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. பலரும் தி.மு.க. நிர்வாகியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

கட்சியில் இருந்து நீக்கம்

தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு உள்ளார். எனவே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இதற்கிடையே தி.மு.க. நிர்வாகி பட்டியலின இளைஞருக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

நேற்று ஒரு தி.மு.க. எம்.பி. கோவில் இடிப்பு சம்பவத்தில் பெருமிதம் கொண்டார். இன்றைக்கு தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பதை காண்கிறோம். நம் அனைவருக்கும் இதுதான் 'தி.மு.க. மாடல்' சமூக நீதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்