தி.மு.க. அரசு இந்து மக்களின் சொத்துகளை கொள்ளையடிக்கிறது
தி.மு.க. அரசு இந்து மக்களின் சொத்துகளை கொள்ளையடிக்கிறது என்று எச்.ராஜா கூறினார்.;
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிேஷகம் செய்ய பரிசீலிப்பதாக கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையே தமிழக அரசுக்கு தெரியவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் 44 ஆயிரம் கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் 36 ஆயிரம் கோவில்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. அரசு இந்து மக்களின் சொத்துகளை கொள்ளையடிக்கிறது. இதை வன்மையாக கண்டிப்பதோடு கோவில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இலவசங்கள் வழங்குவதற்கு அதனை வழங்காமல் இருக்கலாம். பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் பயன்படுத்தி கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.