எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. மான நஷ்ட வழக்கு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தி.மு.க. சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2024-03-14 11:03 GMT

சென்னை,

தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஜாபர் சாதிக்குடன் சினிமா, அரசியல் வட்டாரத்தில் பலர் நெருக்கமாக இருந்திருப்பதாக கூறியிருக்கும் அவர்கள் அதில் தொடர்புடைய நபர்களையும் விசாரணைக்காக அழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது இருவரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீது சென்னை மாநகர குற்றவியல் கோர்ட்டில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் தி.மு.க.வை தொடர்புபடுத்தி பேசியதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மீது ரூ.1 கோடி மான நஷ்ட ஈடுகோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. மனுத்தாக்கல் செய்துள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் வழக்கில் தி.மு.க.வை தொடர்புபடுத்தி பேச அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்