திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் நீக்கம் - துரைமுருகன் அறிவிப்பு
திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாபை நீக்கம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த வருடம் திமுக-வில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் 72 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். சமீபத்தில் திமுக மாவட்ட செயலாளர்களோடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். அந்த கூட்டத்தில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தங்கள் மாவட்டங்களில் கட்சிப்பணியை பொறுப்புடன் ஆற்றவேண்டும் இல்லையென்றால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்று கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலியின் திமுக மத்திய மாவட்ட செயலாளரான அப்துல் வகாப் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுகவின் புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சராக மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதைபோல மதுரையை சேர்ந்த மிசா பாண்டியன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தி.மு.கவினரை பொறுத்தவரை இந்த அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.