தி.மு.க. ஆட்சியில் அதலபாதாளத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதி - அண்ணாமலை குற்றச்சாட்டு
மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காலத்தின் தேவை என்பதை மாநில அரசு உணர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.;
சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாரத்தான் நடத்துவதிலும், முதல்-அமைச்சரின் தவறுகளை பாதுகாப்பதிலும் மும்முரமாக உள்ளார். தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கட்டமைப்பு அதலபாதாளத்தை எட்டியுள்ளது. விரைவில், அது திரும்ப முடியாத நிலையை எட்டிவிடும்.
பெண் ஒருவர் மகப்பேறுக்கு சரியான நேரத்தில் ஆஸ்பத்திரி செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், சிசு மரணமடைந்துள்ளது. உயிரிழந்த சிசுவின் உடலை உறவினர்களிடம் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை அட்டை பெட்டியில் கொடுத்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளை நம்பி செல்லும் மக்கள், அங்கு படும் துயரங்களுக்கு, இழப்பீடு அறிவிப்போ அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையோ தீர்வாகாது. மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காலத்தின் தேவை என்பதை மாநில அரசு உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.