'திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக என்ற அளவில் வளர்க்கப்பட்டது தான் இந்த இயக்கம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-24 15:06 GMT

சென்னை,

இந்தியை நாடு முழுவதும் வளர்க்க இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சுதந்திரத்துக்கு முன்பே இயங்கி வருகிறது. செம்மொழியான தமிழையும் நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது.

இதற்கான விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப்புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்ததில் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக. தமிழ் வெறும் மொழி அல்ல தமிழ் நமது உயிர். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதை திமுக அரசின் தாரக மந்திரம்.

பேரறிஞர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரை கழகம் திட்டத்தை தொடங்குவது மகிழ்ச்சி. மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்க முடியாது. கடந்த ஓராண்டில் மட்டுமே 17 தொடர்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழை பாதுகாத்து விட்டோம். தமிழை பரப்ப வேண்டிய காலம். அதனால் தான் தமிழ் பரப்புரை கழகம் துவங்கி உள்ளோம். உணர்வால் உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தபோது தான், தமிழகத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது. அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து சமூகத்தினருக்குமான வளர்ச்சி திராவிட மாடல் ஆட்சி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்