பா.ஜ.க.வுக்கும் -அ.தி.மு.க.வுக்கும் நட்புரீதியாக த.மா.கா. செயல்படுகிறது-ஜி.கே.வாசன் பேட்டி

மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கும், தமிழகத்தில் பலமிக்க எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் நட்புரீதியாகவும், நலன் விரும்பும் கட்சியாகவும் த.மா.கா. செயல்பட்டு வருகிறது என திருவண்ணாமலையில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2023-10-20 16:57 GMT

மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கும், தமிழகத்தில் பலமிக்க எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் நட்புரீதியாகவும், நலன் விரும்பும் கட்சியாகவும் த.மா.கா. செயல்பட்டு வருகிறது என திருவண்ணாமலையில் ஜி.கே.வாசன் கூறினார்.

இறுதி மூச்சுவரை...

த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு நடைபெற்ற கட்சி நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பங்காரு அடிகளார், மறைவு ஆன்மிகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. பெண்கள் வழிபாட்டிற்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கும் கோட்பாட்டை ஏற்படுத்தியவர். ஆன்மிகம் மட்டுமின்றி கல்வி நிலையங்கள், மருத்துவமனை போன்றவை மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், மாணவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான புனித பணியை தன்னுடைய இறுதி மூச்சு வரை அவர் செய்து கொண்டிருந்தார்.

காவல் துறையினரை ஆட்சியாளர்கள் உரிமையோடு பணியாற்றக் கூடிய நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

பதில் அளிக்க வேண்டும்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் மேலாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதினால் பொறுத்திருந்த மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் பல இடங்களில் வலுவான நிலையில் போராடி வருகின்றனர். அரசு அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

காவிரி பிரச்சினையில் தமிழக அரசு விவசாயிகளுடைய எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.

இந்த பிரச்சினை குறித்து டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடம் தமிழக முதல்- அமைச்சர் பேசி இருக்கலாம். அங்குள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களை கர்நாடகா அரசிடம் பேச அழுத்தம் கொடுத்து இருக்கலாம். ஏனென்றால் தமிழகத்தில் இருக்க கூடிய விவசாயிகள் பிரச்சினை பயிர் பிரச்சினை மட்டுமில்லாமல் உயிர் பிரச்சினையாகவும் உள்ளது. கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரத்து 500 கொடுப்பது போதுமானது அல்ல. ரூ.30 ஆயிரமாக வழங்க எதிர்பார்க்கின்றனர்.

அ.தி.மு.க.-பா.ஜ.க.

மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.விற்கும், தமிழகத்தில் பலம் மிக்க எதிர்க்்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க.விற்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நட்பு கட்சியாகவும், நலன் விரும்பும் கட்சியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வை எதிர்க்க கூடிய, சவால் விடும் வலுவான கூட்டணி வருகிற தேர்தலில் ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது.

திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும் அருணாச்சலா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா பாக்கி உள்ளது. அதனை உடனடியாக கொடுக்க வேண்டும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்