ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை தொடர்பாக தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ரியல் எஸ்டேட் அதிபர்
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30), ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிக்கட்டி விவகாரத்தில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக அவரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் உதயசங்கர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உதயசங்கர், தனது நண்பரான அன்னதானப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவருடன் சேலம் 3 ரோடு அருகே உள்ள ஒரு கடை முன்பு பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் உதயசங்கரை வீச்சரிவாளால் வெட்டியது. மேலும் அவர்கள் அலெக்ஸ் பாண்டியனையும் வெட்டினர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
4 பேரிடம் விசாரணை
இதில் படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உதயசங்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அலெக்ஸ்பாண்டியன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கட்டி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூலிப்படையை ஏவி அவரை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயசங்கருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தரப்பை சேர்ந்த யாருக்காவது இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? எனவும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த கொலை தொடர்பாக தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.