தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்
தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
சென்னை,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப் போட்டி நிலவியது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில், தி.மு.க. 21, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2, ம.தி.மு.க. 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடங்களில் போட்டியிட்டன. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் களம் கண்டது.
இதே கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதிமய்யத்துக்கு மாநிலங்களவையில் ஒரு இடம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன.
அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 32, தே.மு.தி.க. 5, புதிய தமிழகம் கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. கட்சி 1 இடங்களில் போட்டியிட்டது. புரட்சி பாரதம் கட்சியும் அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. புதுச்சேரியில் அ.தி.மு.க. களம் கண்டது.
இதேபோல், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா 19, பா.ம.க. 10, த.மா.கா. 3, அ.ம.மு.க. 2, இந்திய ஜனநாயக கட்சி 1, புதிய நீதிக்கட்சி 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, ஓ.பன்னீர்செல்வம் அணி 1 இடங்களில் போட்டியிட்டன. புதுச்சேரியில் பா.ஜனதா போட்டியிட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிவு நேற்று வெளியானதில், மத்தியில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை பெற்ற நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் தி.மு.க. அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியே கைப்பற்றி அசத்தியது.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. முன்னிலை வகித்து வந்தது. தர்மபுரியில் சவுமியா அன்புமணியும் (பா.ம.க.), விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனும் (தே.மு.தி.க.) முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் பின்தங்கினர். இறுதியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணியே வெற்றி வாகை சூடியது.
மொத்தத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கத்தில், பாதி நிறைவேறி இருக்கிறது. அதாவது, 'நாற்பதும் நமதே' என்ற கோஷத்தையும் அவர் நனவாக்கி இருக்கிறார். 'நாடும் நமதே' என்ற கோஷம் நிறைவேறுமா? என்பது 'இந்தியா' கூட்டணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தான் தெரியும்.