பிரதமர் மோடியை குறை சொல்ல தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

பிரதமர் மோடியை குறை சொல்ல தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-06-30 02:00 GMT

கோவை

பிரதமர் மோடியை குறை சொல்ல தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

பூமிபூஜை

கோவை கெம்பட்டி காலனி ஒக்கலியர் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19½ லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இந்த மையம் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடும் அரசியல் விமர்சனம்

திருமண விழாவில் எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, சாபம் கொடுப்பது, இதுதான் திராவிட மாடலா. இது அநாகரிகம். திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான அரசியல் விமர்சனத்தை வைத்துள்ளார்.

பிரதமர் மோடி பேசியது 100 சதவீதம் உண்மை. அவர் பொய் பேசவில்லை. குடும்ப ஆட்சி நடக்கவில்லை என நீங்கள் சொல்லுங்கள். உங்கள் மகன் என்பதால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

சிதம்பரம் கோவில் பிரச்சினை

சட்டம் என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மதத்திற்கு ஒரு சட்டம் இருப்பதால் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை. சுயநல அரசியலுக்காக பெண்கள் வாய்ப்பை பறிக்கக் கூடாது.

சிதம்பரம் கோவில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டு வேலை செய்கின்றனர். இந்த கோவில் பிரச்சினையில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

பக்ரீத் பண்டிகைக்கு கூட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். என்றாவது மாநிலத்தின் முதல்-அமைச்சராக, இந்து மக்கள் பண்டிகைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளாரா?. ஆனால் பிரதமர் மோடி, அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கிறார். அவரை பற்றி குறை சொல்ல தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்