போதைப்பொருள் புழக்கத்தை தி.மு.க. அரசு கட்டுப்படுத்தக்கோரி அ.தி.மு.க. மனித சங்கிலி போராட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-12 07:36 GMT

சென்னை,

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் சி.வி.சண்முகம் பங்கேற்றார். போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறியுள்ளது. மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இங்கே வந்து போதைப்பொருளை கண்டுபிடிக்க முடிகிறது என்றால் நமது காவல்துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்