அரசு விழாவில் வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் - அண்ணாமலை
ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த திமுகவினருக்குக் கூட இருக்கை வழங்கப்பட்டது. ஆனால், அரசு பிரதிநிதி ஒருவருக்கு இருக்கை இல்லை.
சமூகநீதி, சமத்துவம் எனப் போகும் இடமெல்லாம் தம்பட்டம் அடிக்கும் திமுகவின் முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் சாதிய கோட்பாட்டை இந்த நிகழ்வும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கு தமிழக முதல் அமைச்சரின் பதில் என்ன?" என்று கூறியுள்ளார்.