'மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி அல்வா கொடுக்கும் தி.மு.க.'
‘மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி தி.மு.க. அல்வா கொடுக்கிறது’ என்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசினார்.
மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசியதாவது:-
தி.மு.க. 525 பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. கடந்த 1½ ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருக்கலாம். ஆனால் மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. தி.மு.க.வினரிடம் கருத்து கேட்டுவிட்டு, மக்கள் ஒத்துக்கொண்டதாக கூறி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் மட்டுமின்றி சேவை கட்டணம், பதிவு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் உள்பட அனைத்தையும் தி.மு.க. அரசு உயர்த்திவிட்டது.
வாழ்வாதாரம் பாதிப்பு
மேலும் 100 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 2.26 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்றன. அதன்மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உள்ளது. 20 லட்சம் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, விலைவாசி உயரும். பக்கத்து மாநிலங்களின் மின்கட்டணத்தை ஒப்பிட்டு அமைச்சர் தப்பிக்க பார்க்கிறார்.
ஆனால் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மானியம் வழங்குவதை பற்றி கூறவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. அதை ஒப்பிட்டு பார்க்க தி.மு.க. தயாரா? விசைத்தறி தொழிலாளர்கள் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக மின்கட்டண உயர்வு, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. தேர்தலின் போது மின்கட்டணம் உயராது என்று தி.மு.க. கூறியது. எனவே சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று என்பது தான் தி.மு.க.
இந்த மின்கட்டண உயர்வு மூலம் அரசுக்கு ரூ.59 ஆயிரத்து 435 கோடி என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். மேலும் ஆண்டு தோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்கின்றனர். எனவே 2027-ல், 82 சதவீதம் மின்கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சொத்துவரியை தமிழக அரசு கடுமையாக உயர்த்தி இருக்கிறது.
அல்வா கொடுக்கும் தி.மு.க.
1983-ல் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் காலை உணவு அளிப்பதாக கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உணவு மீதம் இருக்கும் தட்டில் கையை கழுவுகிறார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி விட்டு, காலை உணவு கொடுப்பதாக ஏமாற்றுகின்றனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு நீட் தேர்வை ஒழிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஓராண்டு முடிந்ததும் நீட் ஒழிப்பு என்ன ஆனது பேனாவை காணவில்லையா? என கேட்டால் யோசித்து கொண்டிருப்பதாக கூறுகிறார். மக்களுக்கு நன்மை செய்வதாககூறி அல்வா கொடுப்பதே தி.மு.க.வின் வேலை. தி.மு.க. அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். அதுவரை அ.தி.மு.க.வின் போராட்டம் தொடரும். அதை தடுக்கவே அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர். அடுத்து மறியல் போராட்டத்தை நடத்துவோம். எந்த பஸ்சும் ஓடாது. மக்களை ஏமாற்றும் தி.மு.க.வின் திட்டத்தை முறியடிப்பதே அ.தி.மு.க.வின் நோக்கம்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.