தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கி.வேணு உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கி.வேணுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2023-10-22 11:59 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கி.வேணு (வயது 74). இவர் 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கும்மிடிப்பூண்டி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்தார். தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்த இவர் கடந்த 1975-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வின் முன்னணி தலைவர்களுடன் சிறையில் இருந்தவர் ஆவார். கும்மிடிப்பூண்டி கி.வேணு தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

தி.மு.க. தலைமை கழகம் சார்பில் 2021 ஆண்டிற்கான முப்பெரும் விழாவில் கும்மிடிப்பூண்டி கி.வேணுவிற்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட கும்மிடிப்பூண்டி கி.வேணு, அதன் பின்னர் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பண்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று அதிகாலை முதல் வைக்கப்பட்டது. கி.வேணுவின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் துரை முருகன், சேகர்பாபு ஆகியோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், காந்தி, எம்.பி.கள் டி.ஆர்.பாலு, ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான டி.ஜெ.கோவிந்தராஜன், முன்னாள் அமைச்சர்கள் க.சுந்தரம், நாசர், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கி.வேணு உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று அதிகாலை முதல் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். இதனையடுத்து மாலை பண்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்