பாலத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த தி.மு.க. பிரமுகர் சாவு

பாலத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-07-14 11:31 IST

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆரணி 9-வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஜஸ்வந்த் (4) என்ற மகனும், 4 மாத குழந்தையும் உள்ளனர்.

வினோத்குமார், நேற்று முன்தினம் இரவு தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே வடமதுரை பெரிய காலனி அருகே சென்றபோது நெடுஞ்சாலை துறையினர் சிறு பாலம் கட்டுவதற்காக சாலையின் ஒரு பகுதியில் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் கண் இமைக்கும் நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விட்டார்.

அவரது கூக்குரலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தேர்வாய்கண்டிகை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து வினோத்குமாரை பிணமாக மீட்டனர். இதுபற்றி பெரியபாளையம் போலீசார் ழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையில் ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். ஆனால், பள்ளங்களுக்கு அருகே மின்னும் எச்சரிக்கை பலகை வைக்காததே வினோத்குமார் உயிரிழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்