சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-09 18:54 GMT

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு கட்டணங்களை உயர்த்தி கொண்டே செல்கிறது. அதேசமயம் சாலைகளை பராமரிப்பதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூதகுடி சுங்கச்சாவடி

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க. மத்திய ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சாலைகளை பராமரிக்காமல் சுங்கவரி வசூலிக்க கூடாது, சாலை வரி கட்டி வாங்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் எதற்கு கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க.வினர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் விராலிமலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. நிர்வாகிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் கைது செய்தார்.

கைது

விராலிமலை ஒன்றியம் தொண்டைமான் நல்லூர் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் விராலிமலை கிழக்கு ஒன்றியம், குன்றாண்டார்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில், விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கிலிமுருகன், புதுக்கோட்டை நகர செயலாளர் பரமஜோதி, மகளிர் அணி செயலாளர் வெள்ளையம்மாள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருமயம் அருகே உள்ள லெணா விலக்கு சுங்கச்சாவடியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் சுங்க கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்