தி.மு.க. அரசின் திறமையின்மையை மூடி மறைக்க வானிலை மையத்தின்மீது முதல்-அமைச்சர் பழிபோடுகிறார் - ஓ.பன்னீர்செல்வம்
இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடவில்லை என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
இந்திய வானிலை மையம் தனது 14-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டின் மூன்றாவது பக்கத்தில் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் தென் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்யும் என்று ஏற்கெனவே கணித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, 16-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டின் முதல் பக்கத்தில் தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 16 முதல் 18 தேதி வரை ஆங்காங்கே கனமழை பெய்யும் என்றும், டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிவித்திருந்தது. 17-12-2023 தேதியிட்ட செய்தி வெளியீட்டில் இதனை தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டிருந்தது.
இதையெல்லாம் சரியாக படித்து புரிந்து கொள்ளாமல், 17-12-2023 தேதியிட்ட இந்திய வானிலை மையத்தின் செய்திக் குறிப்பை மட்டும் மேற்கோள்காட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 17-12-2023 அன்று முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கியிருந்தது தி.மு.க. அரசின் திறமையின்மைக்கும், அக்கறையின்மைக்கும், மெத்தனப்போக்கிற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதாவது, மழை பெய்யத் துவங்கிய பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கை! ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்! இயற்கையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும் என்பதையும், அடிக்கடி மாறக்கூடியது என்பதையும் புரிந்து கொள்ளாமல், இந்திய வானிலை மையத்தின்மீது பழி சுமத்தியுள்ளது அறியாமையின் உச்சகட்டம்.
14-12-2023 நாளைய இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்கள் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கமாட்டார்கள். தி.மு.க. அரசின் காலந்தாழ்ந்த நடவடிக்கை காரணமாக, மீட்புப் பணிகளையே மேற்கொள்ள முடியாத அளவுக்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தள்ளப்பட்டார்கள். ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு உணவுப் பொருட்கள்கூட வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. பின்னர் மழை ஓரளவுக்கு நின்ற பிறகு, பயணிகள் பல கிலோ மீட்டர் நடந்து சென்ற நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அவர்களுக்கு உணவு அளித்துள்ளனர்.
மழை நின்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் சென்றடையவில்லை. நிவாரணப் பொருட்களை அளிக்க வலியுறுத்தி திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. பெரும்பாலான பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுதான் நிலைமை. மக்கள் பிரதிநிதிகளோ, அரசு அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை என்றும், சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டிய முதல்-அமைச்சர் கூட்டணி பேரம் குறித்து பேச டெல்லி சென்றது வேதனையிலும் வேதனை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. இது தி.மு.க. அரசின் திறமையின்மையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
மிக்ஜம் புயலின்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் அதிகனமழை, அதாவது 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்த நிலையில், 51 செ.மீட்டர் மழை பெய்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையிலும், 14-12-2023 நாளிட்ட இந்திய வானிலை மையத்தின் முன்கூட்டிய, அதாவது 14-12-2023 தேதியிட்ட அறிவிப்பின் அடிப்படையிலும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது, தி.மு.க. அரசின் செயலற்ற தன்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
தி.மு.க. அரசின் மோசமான செயல்பாட்டில் மக்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ள நிலையில், மக்களின் கோபத்தினை மூடி மறைக்கும் வகையில், சரியான தருணத்தில் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடவில்லை என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.
18-03-2022 அன்று வாசிக்கப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பத்தி 32-ல், "வானிலையைத் துல்லியமாகக் கணிக்க, பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுவத்துவதன் அவசியத்தை, அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது. பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 108 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்ட கருவிகள், அதிவேகக் கணினிகள் (Super Computers) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2022-23-ஆம் நிதியாண்டு முடிந்து 2023-24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த நிலையில் 2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அறிவிப்பினுடைய தற்போதைய நிலை என்ன? உண்மையிலேயே 10 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதா? இல்லை, வெற்று வாக்குறுதிபோல், வெற்று அறிவிப்பா? இதுபோல் எத்தனை வெற்று அறிவிப்புகள் இருக்கின்றன? என்பதையெல்லாம் தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
"சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்குத் தெரியும்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை இந்தத் தருணத்தில் முதல்-அமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தி.மு.க. அரசின் திறமையின்மையை மூடி மறைக்க இந்திய வானிலை மையத்தின்மீது முதல்-அமைச்சர் பழிபோட்டுள்ளது அவரது அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்திய வானிலை மையத்தின்மீது வீண் பழி போடுவதை நிறுத்திக் கொண்டு, இனி வருங்காலங்களிலாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவும், வெள்ள நிவாரண நிதியாக ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் அளிக்கவும், நிவாரண உதவிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை முடுக்கிவிடவும், மத்திய அரசு நிர்ணயித்துள்ளதைக் காட்டிலும் இழப்பீட்டினை இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.