தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது
திருத்தணியில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35). தி.மு.க. பிரமுகரான இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மோகன் தனது வீட்டுக்கு செல்ல அரக்கோணம் சாலையில் இருந்து ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை சரமாரியாக கத்தியால் தலை, கழுத்து, மார்பு மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மோகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி போலீசார் கொலையான மோகன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக திருத்தணி ஜோதி நகரை சேர்ந்த சஞ்சய் என்ற சஞ்சய்குமார் (23), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரித்தீஷ் (19), திருத்தணி பெரியார் நகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21) ஆகியோரை நேற்று காலை சென்னை வியாசர்பாடியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2012-ம் ஆண்டு கைதான சஞ்சய் என்பவரின் சித்தப்பா சிவாவின் கைகளை வெட்டிய வழக்கில் மோகன் சம்பந்தபட்டுள்ளார். நேற்று முன்தினம் சஞ்சையின் சித்தப்பா சிவாவுக்கு நினைவு தினம். இந்த முன்விரோதம் காரணமாக சிவாவின் நினைவு தினத்தில் சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து மோகனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.