கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி போராட்டம்
கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள அகரம் பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக வெங்கடாசலம் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த பாபு என்பவர் தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் பாபு, கிராமர் நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்திடம் வந்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்வதற்காக சிட்டா அடங்கல் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் உங்கள் பெயரில் நிலம் இல்லாத போது உங்கள் நிலத்தில் நெல் அறுவடை செய்ததாக போலியாக சிட்டா அடங்கல் கொடுக்க முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாபு தாலுகா அலுவலகம் முன்பு வெங்கடாசலத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
காத்திருப்பு போராட்டம்
இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டனர். எனவே, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்தை தாக்கிய தி.மு.க. பிரமுகர் பாபு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரி தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள 39 கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையம் சென்று உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. பிரமுகர் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.