வாலிபரை கத்தியால் கீறிய தி.க. பிரமுகர் கைது
வாலிபரை கத்தியால் கீறிய தி.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.;
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 49). திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளரான இவர் செந்துறை அண்ணா சிலை எதிரே போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்த பகுதியில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு பள்ளம் தோண்டியபோது கட்டிடத்தின் கீழே இருந்த கழிவுநீர் தொட்டி உடைந்தது.
இந்த நிலையில் அவரது கடையில் இருந்த கழிவறையின் குழாய் உடைந்ததாக தெரிகிறது. இதனால் கழிவுநீர் அருகே உள்ள கடையில் புகுந்துள்ளது. இதனால் அந்த கடையை நடத்தி வரும் ராஜேந்திரனின் மகன்களான பிரசாத்(32) மற்றும் வினோத்குமார் ஆகியோர் ஆத்திரமடைந்து, இளங்கோவனிடம் ஏன் கழிவு நீர் குழாயை உடைத்தாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் பிரசாத், வினோத்குமார் ஆகியோர் இளங்கோவனை தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன், தன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் பிரசாத்தை சரமாரியாக கிழித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து சென்று பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பிரசாத் கொடுத்த புகாரின்பேரில் இளங்கோவனை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர். இதேபோல் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் பிரசாத், அவரது அண்ணன் வினோத்குமார் மற்றும் இருவரது மனைவிகள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.