வடமாநில வியாபாரியிடம் வழிப்பறி வழக்கு; சப்-இன்ஸ்பெக்டர் மகனுக்கு 4 ஆண்டு சிறை

ராமநாதபுரத்தில் கம்பளி போர்வை விற்பனை செய்த வடமாநில வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரின் மகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-06-22 18:18 GMT

ராமநாதபுரத்தில் கம்பளி போர்வை விற்பனை செய்த வடமாநில வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரின் மகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வியாபாரியிடம் வழிப்பறி

ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன் கோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சுல்தான் சிங்(வயது 32) என்பவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி கம்பளி போர்வைகள் விற்று கொண்டிருந்தார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜலபால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

அப்போது அவரை ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மார்டின் துரைராஜின் மகன் மார்க்ஸ் மைக்கேல் சாம்ராஜ் (22) தலைமையில் ஒரு கும்பல் வழிமறித்து மது வாங்க பணம் கேட்டு மிரட்டியது.

சுல்தான் சிங் கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.2,500, செல்போன் மற்றும் 7 போர்வைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். சுல்தான்சிங் கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மார்க்ஸ் மைக்கேல் சாம்ராஜை பிடித்து, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

4 ஆண்டு சிறை

இதுசம்பந்தமாக போலீசார் மகாசக்திநகரை சேர்ந்த சங்கர் மகன் வெள்ளைமணி (20), மூர்த்தி மகன் ஜோதிமுருகன் (20), வண்டிக்காரத்தெரு முருகேசன் மகன் வினோத்குமார் (23), ஜோதிநகர் முனீஸ்வரன் மகன் குமரகுரு(19), ஓம்சக்திநகர் செல்வம் மகன் அஜய்குமார்(20), முத்தையா மகன் அருண்குமார் (21) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சீனிவாசன் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மார்க்ஸ் மைக்கேல் சாம்ராஜ்க்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜரானார். 

Tags:    

மேலும் செய்திகள்