உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் பீர்பாட்டிலால் அடித்துக்கொன்றது அம்பலம்
ஓசூரில் குழந்தை சாவில் திடீர் திருப்பமாக உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் பீர்பாட்டிலால் அடித்துக்கொன்று விட்டு படியில் இருந்து விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஓசூர்
ஓசூரில் குழந்தை சாவில் திடீர் திருப்பமாக உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் பீர்பாட்டிலால் அடித்துக்கொன்று விட்டு படியில் இருந்து விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
குழந்தை சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து இறந்தார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.
கள்ளக்காதலன் கைது
இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார். இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கள்ளத்தொடர்பு
ஓசூர் ஆலூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சக்தி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
எனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நந்தினி தனது தாயார் வீட்டில் இருந்து வந்து விட்டாள். இதனால் நான் அவளுக்கு ஆலூரில் வீடு பார்த்து கொடுத்தேன். நான் அடிக்கடி ஆலூர் சென்று நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன்.
உல்லாசத்திற்கு இடையூறு
கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது குழந்தை ஜெகநாதன் எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அப்போது ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து 7-ந் தேதி குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள்.
அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை குழந்தை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் கோகுல்நகர் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம்.
தாயின் புகாரால் சிக்கினேன்
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தேர்பேட்டை ரேஷன்கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க நந்தினி சென்றார். அங்கு அவரை பார்த்த அவரது தாயார் வள்ளி, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என கேட்டார். அப்போது மூத்த மகனை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு விட்டதாகவும், 2-வது மகன் படியில் இருந்து விழுந்ததில் இறந்து விட்டதாக கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நந்தினி, குழந்தையை நான் பீர்பாட்டிலால் தாக்கி கொன்றதை ஒப்புக்ெகாண்டார். இதையடுத்து என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் நேற்று தாசில்தார் கவாஸ்கர், அட்கோ போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் நந்தினியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.