ஆட்டோ டிரைவரை ஹெல்மெட்டால் தாக்கிய மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கைது

ஆட்டோ டிரைவரை ஹெல்மெட்டால் தாக்கிய மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-14 18:47 GMT

ஷேர் ஆட்டோ

பெரம்பலூர் மாவட்டம், அருமடல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பாலமுருகன் (வயது 27). இவர் பெரம்பலூரில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். பாலமுருகன் நேற்று முன்தினம் மாலை பெரம்பலூா் நான்கு ரோட்டில் இருந்து தனது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பழைய பஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் காமராஜர் வளைவு போக்குவரத்து சிக்னலில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அதே சாலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முத்துக்குமார் (48), குன்னம் தாலுகா, பென்னகோணத்தை சேர்ந்த சிதம்பரத்தின் மகன் அமர்நாத் என்கிற மகேசுடன் வந்து நின்றார்.

ஹெல்மெட்டால் தாக்கினார்

அப்போது அவர்கள் சாலையில் திரும்புவதற்காக வழி விட ஷேர் ஆட்டோவை சற்று முன்னே எடுக்குமாறு பாலமுருகனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கும், பாலமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தனது கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் பாலமுருகனின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பாலமுருகன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில், அவருக்கு 4 தையல்கள் போடப்பட்டன. மேலும், பாலமுருகன் அடித்ததாக முத்துக்குமாரும் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் முத்துக்குமார், மகேஷ் ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். முத்துக்குமார் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்