விழுப்புரத்தில் மாவட்ட திட்டக்குழு 2-வது கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரத்தில் மாவட்ட திட்டக்குழு 2-வது கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-09-20 18:45 GMT

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு 2-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புறத்திற்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை உள்ளடக்கிய உறுப்பினர்களை கொண்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்குழுவினர், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை தேர்ந்தெடுந்து மாநில திட்டக்குழுவிற்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்படுத்துவது ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே அமையும். ஆனால் திட்டக்குழு உறுப்பினர்களால் மட்டுமே அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை ஏற்படும்.

அந்த வகையில் முத்தாம்பாளையம் ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், படகு சவாரி அமைத்தல் தொடர்பாகவும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வசந்தகிருஷ்ணாபுரம், ஆடுர்கொளப்பாக்கம், வேளாகுளம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய மணம்பூண்டி தென்பெண்ணையாற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்துதல் குறித்தும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு ரூ.50 லட்சத்தில் ரேடியோலஜி கட்டிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு முன்மொழிவு கோரப்பட்டுள்ளது என்றார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்