வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-27 18:34 GMT

கிருஷ்ணராயபுரம், தாந்தோணி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடு மற்றும் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் வழங்கினார்.

பின்னர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாதானபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வெள்ளநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரம் குறித்து கேட்டறிந்து உணவுப்பொருட்களின் இருப்பு, பதிவேடுகள், அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதியதாக வகுப்பறை கட்டுவதற்காக சேதமடைந்த வகுப்பறை கட்டிடம் இடிக்கும் பணிகளையும், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாடி கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகளின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணி மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்