ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-20 21:32 GMT

நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதில் நெல்லை வர்த்தக மையம் எதிரே சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் வரவேற்பு அறை, அலுவலக அறை, கட்டுப்பாட்டு அறை, உணவு அருந்தும் அறைகளுடன் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கணினி மேஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டு நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டப்பட்டு வருகிறது.

இதனை நேற்று மாலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருமான செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நெல்லை மாநகரில் உள்ள 4 மண்டல பகுதிகளிலும் தூய்மை பணியாளர்களை கொண்டு சேகரிக்கப்படும் குப்பைகளை ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் வைத்து தரம் பிரிப்பதை பார்வையிட்டார். பின்னர் பாளையங்கோட்டை பஸ்நிலையத்தை பார்வையிட்ட அவர், அங்கு பயணிகள் பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி பொறியாளர்கள் குமரேசன், லட்சுமணன், உதவி ஆணையாளர் காளிமுத்து, மாநகர நல அலுவலர் சரோஜா, மாநகர பணியாளர் உதவி பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்