மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.;
தடகள போட்டிகள்
பாரதியார் தினம், குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு குறுவட்ட அளவில் தடகள போட்டிகளும், குழு விளையாட்டு போட்டிகளும் தனித்தனியாக நடத்தப்பட்டது.
இதில் தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கும், குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளுக்கும் மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று தொடங்கியது. அதன்படி 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கில் தனித்தனியாக நேற்று நடந்தது.
பதக்கம்-சான்றிதழ்
போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்க பதக்கமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாலிபால், கால்பந்து
14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மீதமுள்ள தடகள போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி மாணவிகளுக்கும், 12-ந்தேதி மாணவர்களுக்கும் வாலிபால் போட்டி, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டென்னிஸ், கபடி ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணியளவில் நடக்கிறது. அதே பள்ளியில் வருகிற 16-ந்தேதி மாணவிகளுக்கும், 18-ந்தேதி மாணவர்களுக்கும் ஹேண்ட் பால், கோ-கோ, எறிபந்து, ஆக்கி ஆகிய குழு விளையாட்டு போட்டிகளும் நடக்கிறது.