சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.;

Update: 2023-03-27 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

செறிவூட்டப்பட்ட அரிசி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் தயாரிக்கப்பட்ட 10 வகையான உணவுகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், திட்ட இயக்குனர் ஜாகீர்உசேன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திசரள், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் குமார், துணை மண்டல மேலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மூலம் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயார் செய்யப்பட்ட, எலுமிச்சை, சாம்பார், தேங்காய், கீரை, தக்காளி, மாங்காய், பருப்பு, தயிர் சாதங்களும், சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட 10 வகையான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நுண்ணூட்டச்சத்து

மேலும், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் கலந்த உப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. வைட்டமின் நுண்ணூட்டச்சத்து நிறைந்த பொருட்களை ஏழை எளியோர் வாங்கி பயன்படுத்தாத நிலை உள்ளதால் சாதாரண அரிசியில் வைட்டமின்களான போலிக் அமிலம், இரும்பு சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை கலந்த செறிவூட்டல் என்னும் சத்து அரிசியை தமிழக அரசு வழங்க உள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயார் செய்யப்பட்ட உணவை பொதுமக்கள் பார்வையிட்டு உண்டு மகிழ்ந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்