உளுந்து விதைகள் மானியத்தில் வினியோகம்-வேளாண் அதிகாரி தகவல்

உளுந்து விதைகள் மானியத்தில் வினியோகம் செய்யப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்தனர்.

Update: 2023-01-24 18:20 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டு நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை வயல்களில், உளுந்து பயிர் சாகுபடி செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள், 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. நெல் சாகுபடிக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதால், குறுகிய காலத்தில் அதாவது 65 நாளில், பயிர் அறுவடைக்கு வந்து, மகசூலை தந்து, விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதால், ஆகாயத்திலுள்ள தழைச்சத்து, பயிரின் வேர் முடிச்சுகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் பயிரும் நன்கு வளரும், சாகுபடி நிலமும் வளமடைகிறது. இதனால் அடுத்து சாகுபடி செய்யும் பயிருக்கான உரச்செலவு குறைகிறது. நெல் அறுவடையான பின்பு, பயறு சாகுபடி செய்யப்படுவதால், நிலம் தரிசாக இல்லாமல், நிலப்பயன்பாடாகிறது. இது தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கிக்கூற, மாவட்ட அளவிலும், வட்டார, குறு வட்டார மற்றும் கிராம அளவில், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் விதைக்கிராம திட்டங்களில், மானியத்தில் உளுந்து விதைகள் பெறும் விவசாயிகள், சம்பா நெல் சாகுபடிக்குப் பின், உளுந்து விதைகள் விதைப்பு செய்து பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்