குமரி மாவட்டத்தில்விநாயகர் சிலைகள் 2 இடங்களில் கரைப்பு

குமரி மாவட்டத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 2 இடங்களில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

Update: 2022-09-02 18:31 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 2 இடங்களில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை பிரதிஷ்டை

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சதுர்த்தி அன்று இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டன. இதுபோக வீடுகள் மற்றும் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சிலை வைக்கப்பட்ட 3-வது நாளில் இருந்து கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஊர்வலம்-கரைப்பு

அதன் ஒரு பகுதியாக சிவசேனா சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 45 விநாயகர் சிலைகள்  வாகனங்கள் மூலம் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் ஊர்வலம் மேளதாளம் முழங்க சுசீந்திரம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழியில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தக்கலை

சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இலுப்பக்கோணத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மதியம் புறப்பட்டது. இதனை மாநில பொதுச்செயலாளர் எ.பி.ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஜெயராஜன், இளைஞரணி தலைவர் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமானது பத்மநாபபுரம், தக்கலை வழியாக நாகர்கோவில் நாகராஜாகோவில் திடல் சென்றடைந்தது. பின்னர் அங்கு குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த வாகனங்களோடு ஒன்று சேர்ந்து ஊர்வலம் மீண்டும் புறப்பட்டது. இதனை தொழிலதிபர் என்ஜினீயர் விஜி ெதாடங்கி வைத்தார்.

தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன. முன்னதாக கடற்கரையில் விநாயகர் சிலைகளுக்கு கழுகறை சதீஷ் போற்றி பூஜை செய்தார்.

குழித்துறை

இதேபோல் தமிழ்நாடு சிவசேனா கட்சி சார்பில் குலசேகரம், திருவட்டார், களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட 64 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மாநில தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் மேல்புறத்தில் இருந்து ஊர்வலமாக சென்று குழித்துறை வாவுபலி திடலில் வைக்கப்பட்டது. அங்கு மகாதீபாராதனை காட்டப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் சந்தோஷ் சஜூ, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்