மதுபானம் வாங்கியதில் தகராறு;வாலிபருக்கு சரமாரி வெட்டு
கயத்தாறு அருகே மதுபானம் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு சரமாரி வெட்டு விழந்தது.;
கயத்தாறு:
கயத்தாறு அருகே டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தென்காசி கோர்ட்டில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் சரண் அடைந்தனர்.
வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் மகேஷ்வரன் (வயது 23).
இவர் நேற்று முன்தினம் இரவில் கயத்தாறு அருகே சவாலப்பேரி நாற்கரசாலை ஓரமாக உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க சென்றார். அப்போது, அங்கு வாகைதாவூர் கிராமத்தை சேர்ந்த சந்தனகுமார், அவரது தம்பி சுபாஷ், சவாலப்பேரியைச் சேர்ந்த இசக்கிபாண்டி ஆகியோர் வந்தனர்.
அரிவாள் வெட்டு
மதுபாட்டில் வாங்கியது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கடையில் இருந்து சிறிது தூரம் சென்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிபாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஷ்வரனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். பின்னர் இசக்கிபாண்டி உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கோர்ட்டில் சரண்
இதுகுறித்து உடனடியாக கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மகேசுவரனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த இசக்கிபாண்டி, சந்தனகுமார், சுபாஷ் ஆகியோர் தென்காசி ேகார்ட்டில் சரண் அடைந்தனர்.