திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி... குப்பைமேட்டில் உடல்
பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையே என்று கூறி அண்ணன் தகராறு செய்துள்ளார்.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சாவடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவருடைய தம்பி ரகு (35). லாரி டிரைவர். மோகனுக்கு திருமணம் ஆகாத நிலையில், தம்பி ரகுவிற்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். அண்ணன், தம்பி 2 பேரும் இரவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அவர்கள் இருவரும் வீட்டின் அருகே மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது மோகன், தம்பி ரகுவிடம் நீ மட்டும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கிறாய், எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையே என்று கூறி தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ரகு, அருகில் இருந்த கொடுவாளால் அண்ணன் மோகனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் மோகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்துவிட்டதை அறிந்த ரகு, அருகே உள்ள குப்பை மேட்டில் குழிதோண்டி மோகனின் உடலை புதைத்தார்.
பின்னர் வீட்டுக்கு சென்று ரகு தனது மனைவி தீபாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். சம்பவம் குறித்து தீபா காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ரகுவை கைது செய்தனர். திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பியே வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.