கோவில் விழா வரி பிரிப்பதில் தகராறு; 8 பேர் மீது வழக்கு
கோவில் விழா வரி பிரிப்பதில் தகராறில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முத்துக்குட்டி (வயது 22). இவர் அங்குள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா குழு தலைவராக உள்ளார். கோவில் விழாவிற்கு ரூ.5,500 வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் துரை (65) ரூ.1,500 மட்டும் வரியாக கொடுத்திருந்தார். சம்பவத்தன்று முத்துக்குட்டி விழா குழுவினருடன் சென்று வரி பிரித்துக் கொண்டிருந்த போது, துரையிடம் பாக்கி பணம் கேட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த துரை, கிருஷ்ணன், சுடலைமணி, கிருஷ்ணன் என்ற கண்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து முத்துக்குட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதேபோல் முத்துக்குட்டி, கனகராஜ், மற்றொரு சுடலைமணி, உய்காட்டான் ஆகிய 4 பேரும் சேர்ந்து துரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.